தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்நேற்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான இணைகிறது.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் திமுகவை எதிர்த்து வந்தாலும், இப்போது கட்சி தொண்டர்களின் ஆதரவுடன் இணைந்துள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார். “இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
”கேப்டன் விஜயகாந்த் கலைஞரை மிகவும் மதித்தவர். இந்த கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக ; கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! ” என்று ஸ்டாலின் கூறினார்.தேமுதிகவுக்கு தொகுதிகள் எத்தனை என்பது பின்னர் திமுக அமைக்கும் பேச்சுவார்த்தைக் குழுவுடன் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த கூட்டணி திமுகவுக்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் தேமுதிக சில முக்கிய தொகுதிகளில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. அதேசமயம், அதிமுக, பாஜக தரப்பில் அதிர்ச்சியும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்து தமிழக பாஜக தனது எக்ஸ்தளப்பதிவில், ”தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” எனக் கூறியுள்ளது.இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தரப்பினர் ‘ ‘ஜெயலலிதா மோடியா? இல்லை லேடியா? எனக் கேட்டார். இப்போது மட்டும் அவரது ஆன்மா உங்களை மன்னித்து விட்டதா?” என பதிலடி கொடுத்து வருகின்றனர்.








