அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு செல்லும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் திடீரென செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது 10 நாட்களில் இதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நான் தலைமைக்கு கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டனர் என தெரிவித்தார்.
இன்று பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள செங்கோட்டையனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே காரில் செல்கின்றனர். அவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பசுபொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மூவரும் இணைந்து அரசியலில் முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







