வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!

ன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் வழக்கம் போல எவ்வித தடையுமின்றி முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியில் சமீபகாலமாகப் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாததால் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன. புதிய ஊழியர்களை உடனடியாகப் பணிக்கு அமர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் மற்றும் தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.