மருதமலை சாலையில் மரங்கள் வெட்ட தடை

கோவை – மருதமலை சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருதமலை சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினால் 19 ஆல மரங்கள், 9 அரச மரங்கள் ,17 பனை மரங்கள் மற்றும் இதர 100 வகை நாட்டு மரங்கள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கோவையைச் சேர்ந்த ஓசை அமைப்பின் கோரிக்கையை சுட்டிக்காட்டி முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் நெடுங்காலமாக சாலை ஓரங்களில் வளர்க்கப்பட்ட இந்த மரங்கள் , ஆந்தைகள் மற்றும் சிறிய வகை பாலூட்டிகளுக்கு முக்கியமான ஆதாரமாக திகழ்வதாகவும், மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வடவள்ளி முதல் அரசு சட்டக் கல்லூரி வரையிலான சாலையை 4 வழி சாலையாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பணிகள் அவசியம் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார் , பரதசக்கரவர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இந்த பிரச்சினையில் அரசு தரப்பு முறையான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்கும் வரை அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டவோ அல்லது அகற்றவோ கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.