சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகித்து வருகிறது. கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், கோவில் நிர்வாகம், கணக்கு வழக்கு உள்ளிட்ட அனைத்துமே திருவிதாங்கூர் தேவசம் போர்டு தான் நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி கேரளாவின் பம்பையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் ‘லோக ஐயப்ப சங்கமம்’ என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் வந்த கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசன் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் கேரளா மட்டுமல்லாது கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேரளா அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளா ஐயப்பன் பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்ததற்கு கேரள பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய கேரளா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர்,” பல ஆண்டுகளாக சபரிமலை மரபுகளை பக்தர்களை அவதூறு செய்தவர் பினராயி விஜயன். தமிழ்நாட்டின் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இந்துக்களின் நம்பிக்கைகளை அவதூறு செய்கின்றனர். இந்தியா கூட்டணி கட்சியினரின் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு உண்மையான பக்தர்கள் செல்ல மாட்டார்கள்” எனவும் கூறியிருந்தார்.