சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
7 வருட விசாரணைக்கு பிறகு எம்.பி. ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிபதி சிவக்குமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 10-ம் தேதி திமுக எம்.பி. ஆ.ராசா, நண்பர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Leave a Reply