நில விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில்… அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு.!!

கோவை : சொத்து மேல் சொத்து வாங்கி குவித்ததாக நெட்டிசன்கள் புகார் கூறி வந்த நிலையில் அண்ணாமலைக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டியில் ரூ.80 கோடி நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் வாங்கி மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். அதேபோல அண்ணாமலை தனது மனைவி அகிலா பெயரில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியில் 1.2 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய தகவலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மாற்றுக்கட்சியினர் மட்டுமின்றி பாஜவினர் பலர் அண்ணாமலையை விமர்சித்தும், சொத்து வாங்க எங்கிருந்து பணம் வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பாஜ பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் பல பொய்யான தகவல்களை கூறியிருப்பதாக புகார் எழுந்தது. தொடர் விமர்சனங்கள் அண்ணாமலைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அண்ணாமலை உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.