தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த கல்வி ஆண்டில் பசுமையும் பாரம்பரியமும் என்கின்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் 1, 2 ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக, பள்ளி அளவிலும் குறுவட்ட அளவில் நடைபெற்ற முடிந்து அதன் தொடர்ச்சியாக வட்டார அளவில் சூலூர் வட்டத்துக்குட்பட்ட சூலூர் ஒன்றிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 55 துவக்க பள்ளிகள் 20 நடுநிலைப் பள்ளிகள் தலா 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட்ட 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பசுமையும் பாரம்பரியமும் கலைத் திருவிழா சூலூர் ஆர்விஎஸ் களம் கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தன்னாசி,ஸ்ரீகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.வி.எஸ் கலைக் கல்லூரியின்
செயலர் மற்றும் முதல்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சூலூர் ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பிரியா அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும் அனைத்து தொடர்ந்து மாநில அளவிலும் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல இருக்கிறார்கள்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.