கார் வாங்க போறீங்களா… இதோ உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…

சென்னை: நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் டூவீலர், கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கும்.

ஆனால் இந்த முறை கார், டூவீலர் விற்பனை மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆகஸ்ட் மாதத்தில் கார், டூவீலர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதன் பின்னணியில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

நம் நாட்டை எடுத்து கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் டூவீலர், கார்கள் உள்பட பிற வாகனங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கும். இதற்கு முக்கிய காரணம் ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்துக்கு பிறகு அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருவது தான்.

விநாயகர் சதுர்த்தி, ஓணம், தசரா, விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று வரும் மாதங்களில் பண்டிகைகள் அணிவகுக்கும். பொதுமக்களும் பண்டிகை தினத்தை மனதில வைத்து புதிய வாகனங்களை வாங்குவார்கள்.

இதற்கான தொடக்கப்புள்ளி ஆகஸ்ட் மாதம் தான். இதனை மனதில் வைத்தே அனைத்து டூவீலர், கார் நிறுவனங்களும் தங்களின் உற்பத்தியை அதிகரித்து அதனை சந்தைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கார், டூவீலர் விற்பனையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஏனென்றால் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. விற்பனை மந்தமாகி உள்ளது.

அரசின் ‘Vahan’ இணையதளத்தின் புள்ளிவிவரப்படி வாகன விற்பனை கடந்த 12 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதியின் நிலவரப்படி சுமார் 18 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. செப்டம்பர் 2024ல் 17.4 லட்சம் யூனிட்டுகளும், டிசம்பர் 2024-ல் 17.75 லட்சம் யூனிட்டுகளும் விற்பனையான நிலையில் தற்போது ஆகஸ்ட்டில் சிறிய அளவில் தான் அதிகரித்துள்ளது. இது கார் சந்தையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விலை குறைந்த விற்பனையாகும்.

இதற்கு முக்கிய காரணம் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை தான். அதாவது நாட்டில் ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஜிஎஸ்டியில் தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று 4 அடுக்குகளில் வரிகள் உள்ளன. இதில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதான் கார், டூவீலர் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3-4 தேதிகளில் கூட உள்ளது. அப்போது ஆலோசித்து 12% சதவீத ஜிஎஸ்டியில் இருக்கும் பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டியிலும், 28 சதவீத ஜிஎஸ்டியில் இருக்கும் பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலும் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் டூ வீலர், கார்களின் விலைகள் சரிய வாய்ப்புள்ளது. கார், டூவீலர்கள் வாங்குவோருக்கான வரி குறையும். இதனால் ஆகஸ்ட்டில் பலரும் கார், டூவீலர் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

ஏனென்றால் இப்போது அனைத்து வகையான Internal Combustion engine வாகனங்களை எடுத்து கொண்டால் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வணிகம் சார்ந்த வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலும், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் 12% ஜிஎஸ்டி வரம்பிலும் உள்ளது.

தற்போது ஜிஎஸ்டியில் 28 சதவீதம், 12 சதவீதம் நீக்கப்படும்போது கார்கள், டூவீலர்களின் விலைகள் குறையும். இதனால் அனைத்து மக்களும் ஜிஎஸ்டி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துள்ளன. இதுதான் ஆகஸ்ட் மாதத்தில் கார், டூவீலர்களின் விற்பனை சரிய முக்கிய காரணமாகும்.

மேலும் தற்போது 4 மீட்டருக்கு அதிக நீளம் மற்றும் 1,400 சிசி இன்ஜின் கொண்ட கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி மற்றும் 22 சதவீத இழப்பீட்டு வரி (Compensation Cess) உள்ளது. இதனால் 50 சதவீத வரி செலுத்த வேண்டும். இதனை தவிர்க்கும் வகையிலும், எஸ்யூவி வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்திலும் முக்கிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், புதிய ஜிஎஸ்டி குறைப்பால் கார் வாங்குபவர்கள் ரூ.60,000 முதல் ரூ.1.3 லட்சம் வரை சேமிக்கலாம், மேலும் இஎம்ஐ கட்டணும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கார்கள் வாங்குவதை தற்போது தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இதனால் வாகன விற்பனை சரிய தொடங்கி உள்ளது. இதனால் கார் விற்பனையாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.