சென்னை: வரும் 20ம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் புறப்பட தயாராகி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்தது. இதனால் பயணிகள் நொந்து போயினர். இந்நிலையில் தான் இன்று தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கொடுத்த வார்னிங்கால் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர். ஜவுளிக்கடைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் ஆங்காங்கே புதிதாக பட்டாசு கடைகள் முளைத்துள்ளன. சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதனால் விமானம், ரயில், அரசு பஸ், தனியார் பஸ்களில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் விமானம், தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு வரை அதிகரித்துள்ளது. வழக்கமாக வசூலிக்கப்படுவதை விட அதிகப்படியான கட்டணம் பொதுமக்களிடம் டிக்கெட்டிற்கு வாங்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். டிக்கெட் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வார்னிங் செய்தார்.
அதுமட்டுமின்றி போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் இன்று ஆம்னி உரிமையாளர், சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆம்னி பஸ்கள் விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். தற்போது அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. கடந்த பொங்கல் பண்டிகையின்போது அதிகப்படியாக கட்டணம் வசூலித்த பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அதுபோன்று இந்த முறையும் நடந்து கொள்ள வேண்டாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று வார்னிங் செய்தார்.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை உள்பட பிற இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.2,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.5 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அரசு கொடுத்த வார்னிங்கால் இந்த கட்டண குறைப்பு வந்துள்ளது. இது டிக்கெட் முன்பதிவு செயலிகளிலும் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில செயலிகளில் கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. அதுனை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் விரைவில் அனைத்து டிக்கெட் முன்பதிவு செயலிகளிலும் கட்டணம் குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது மண்டல வாரியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.