வெளிநாடு போறீங்களா… இந்த தப்ப மட்டும் மறந்தும் பண்ணிடாதீங்க!!

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல்வலிக்கு மனைவி அனுப்பிய வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள் அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மருந்துகளை எடுத்துச் செல்வதில் கவனம் தேவை என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதர சகோதரிகளின் கனிவான கவனத்திற்கு, சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல் வலிக்கு மனைவி அனுப்பி வைத்த வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள், பணியாளரான கணவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளனர்.மனைவி அனுப்பி வைத்த மாத்திரைகள் “20 – 30 ட்ரமடால் எனும் வலி நிவாரணி மாத்திரைகள்” தான். அவை அங்கு விற்கவோ அல்லது தவறான முறையில் பிறருக்கு வழங்கவோ இல்லை. தனிநபரின் வலிக்காக அனுப்பப்பட்ட மாத்திரைகள் தான் என்றாலும் நமது நாட்டின் சட்டம் வேறு. மற்ற நாடுகளின் சட்டங்கள் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வலி நிவாரணிகளில் ஓபியாய்டு (ஓபியம் போல செயல்படும் மருந்துகள்) வகை மருந்துகளை நம் நாட்டில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி வழங்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனாலும் அங்கும் இங்குமாக இந்த மாத்திரை மருத்துவர் சீட்டு இல்லாமலும் கிடைக்கிறது.

இதன் விளைவாக இந்த மாத்திரையை போதை வஸ்துவாக இளையோரில் ஒரு சாரார் பயன்படுத்தி வருவதும் உண்மை. நம் நாட்டைப் பொருத்தவரை ட்ரமடால் (TRAMADOL) இருமல் மருந்தில் இருக்கும் கோடீன் (CODEINE) தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகள், மன அமைதி மாத்திரைகள் போன்றவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வெளி நோயாளிகள் வாங்கி உண்ணலாம். ஆனால் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள், எகிப்து, சவுதி அரேபியா, பிரிட்டன் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி இந்த மாத்திரைகளை வைத்திருப்பது சரியா என்பதை நாம் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அரேபிய வளைகுடா நாடுக‌ளி‌ல் ட்ரமடால், கோடீன், தூக்க மாத்திரைகள் சிறிய அளவு வைத்திருந்தாலும் அது அந்நாட்டுச் சட்டப்படி குற்றமாகும். ஒரு மாத்திரை வைத்திருந்தாலும் குற்றம் குற்றமே.

இந்நிலையில் தான் கட்டடப் பணியாளரான கணவருக்குத் தெரியாமல் அனுப்பிய 20 ட்ரமடால் மாத்திரைகள் – 24 வருட சிறை தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறாக பல மருந்துகள் நம் நாட்டில் சட்பப்படி மருத்துவப் பரிந்துரையின்படி பெற்று உபயோகிக்க முடியும். ஆனால் நாம் செல்லும் நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாக இருக்கும். இந்த பிரச்சனையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நாம் செல்ல வேண்டிய நாட்டின் சட்டப்படி தடைசெய்யப்பட்ட மருந்துகளை அறிந்து கொள்ள வேண்டும் . இதை அறிய அந்த நாட்டின் தூதரகத்தின் இணையதளத்தில் BANNED DRUGS IN UAE, BANNED DRUGS IN USA என்று தேடினால் கிடைத்து விடும். ஒருவேளை அந்நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நமது மருத்துவ காரணத்திற்காக நாம் கொண்டு செல்ல வேண்டியது வந்தால் கட்டாயம் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் மருந்தை மருத்துவ காரணத்திற்காக இறக்குமதி செய்து கொள்ளும் முன் அனுமதியை (permission to import medicines for treatment purposes) வாங்க வேண்டும்.அதற்கு உங்களுடைய மருத்துவரிடம் இருந்து முறையான பரிந்துரைச் சீட்டு அதனுடன் அந்நாட்டு தூதரகம் அனுமதித்த வடிவத்தில் இந்ந மருந்திற்கான தேவை குறித்து மருத்துவரிடம் ஆங்கிலத்தில் எழுதி வாங்கி அதை வைத்து முன் அனுமதி பெற ஆன்லைன் மூலம் மனு கொடுக்க வேண்டும்.அதை அவர்கள் ஆலோசித்து ஆராய்ந்து பிறகு அனுமதி அளித்தால் அந்த சீட்டுடன் கூடவே மருத்துவரின் பரிந்துரைச் சீட்டையும் எடுத்துக் கொண்டு அந்த மருந்தை எடுத்துச் செல்லலாம். மற்றபடி தனியாக மருந்துகளை அதுவும் தடை செய்யப்பட்ட மருந்துகளை (நம் நாட்டு மருத்துவர் பரிந்துரைச் சீட்டு வைத்திருந்தாலும்) எடுத்துச் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயலாகும். இது குறித்து நமது சகோதர சகோதரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..