துருக்கி: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது.
அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்.. பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அன்று மட்டும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
அதன் பின்னரும் கூட பல நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இதன் காரணமாக அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலரும் ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நிலநடுக்கம் காரணமாக சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இப்போது துருக்கியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் இரண்டு கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு துருக்கிய நகரமான அன்டாக்யாவுக்கு அருகில் ஏற்பட்ட இந்த பூகம்பம் துருக்கி, சிரியா, எகிப்து மற்றும் லெபனான் வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்குள்ள பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் முனா அல் ஓமர் என்பவர் பூங்காவில் தனது குழந்தையுடன் இருந்தார். நிலநடுக்கம் காரணமாக முனா அல் ஓமரின் 7 வயது மகன் பயந்து போய்விட்டார். இது குறித்து முனா அல் ஓமர் கூறுகையில், “என் காலடியில் பூமி பிளந்துவிடும் என்று நான் நினைத்தேன். அந்தளவுக்கு நிலநடுக்கம் சக்திவாய்ந்து இருந்தது” என்றார்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட கொஞ்ச நேரத்தில் அங்கு தெற்கு ஹடாய் மாகாணத்தில் உள்ள சமன்டாக்கில் மற்றொரு பூகம்பம் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி- சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியின் அலெப்போவில் கட்டிடங்களில் இருந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிது நேரத்தில் இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Leave a Reply