விருப்பமனு வாங்க ஆள் இல்லாமல் காத்து வாங்கும் அலுவலகம்.!!

சென்னை: சட்டசபை தேர்தலுக்காக விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலஅவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அதன்படி வரும் 15 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இம்முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒரு நான்கு முனைப் போட்டி களம்காண உள்ளது.தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தேமுதிக கடந்த 6ஆம் தேதி , மாநிலம் தழுவிய 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியது.பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000, தனித் தொகுதிகளுக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் இந்த மனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்விருப்ப மனுக்கள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டியிட விரும்பும் கட்சியினர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இது பெரும் விவாதத்திற்குள்ளானது. இது தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் வெளியான நிலையில் அன்றைய தினம் அஷ்டமி என்பதால் யாரும் விருப்பமனு பெற வரவில்லை என கட்சித் தலைமை சப்பைக் கட்டு கட்டியது. இந்த நிலையில் அடுத்த நாள் நவமி திதி என்பதால் அன்றைய தினமும் கட்சி அலுவலகத்தில் காற்று வாங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் கடைசி நாள் என்பதால் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனுவை கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து விருப்பமனுவை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார் பிரேமலதா. இதனால் வரும் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்குள்ளாக பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை கொடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.