கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிடவும் குடியரசு தலைவருடன் தேநீர் அருந்த வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கீதா தனது கணவருடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பவன் குமாரை சந்தித்து குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வந்த கடிதத்தை காட்டி வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் சங்கீதா கூறியதாவது:- நான் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது கணவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார் .நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தில் பூர்வீக நிலத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டினோம். மேலும் எங்களது இரு குழந்தைகளையும் படிக்க வைத்தோம். தற்போது குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கவும் குடியரசு தின விழா பேரணியை நேரில் பார்வையிடவும் அழைப்பு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .இவ்வாறு அவர் கூறினார்.







