கோவையில் நீண்ட காலத்திற்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடப்படும்.இந்நிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் 3 மாடி கட்டிடம் காற்றில் அசைவதாக பரவியதாக புகாரளிக்கப்பட்டது. நிலநடுக்கமா அல்லது கட்டிடம் சேதமடைந்துள்ளதா என்று பதற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அதன் முழு விபரத்தை காணலாம்.
கோவை ஆர்எஸ்புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் அஸ்வின் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் உள்ளது. அதில் தங்க நகை தயாரிப்பு பட்டறை இயங்கி வருகிறது. நேற்று மாலை அந்தக் கட்டிடம் காற்றில் அசைகிறது என்று காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வந்தனர். கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கமா அல்லது கட்டிடம் பலமிழந்து விழும் நிலையில் உள்ளதா என்று அச்சம் எழுந்தது. சாலை முழுவதும் மக்கள் கூடி பதற்றத்துடன் கட்டிடத்தை பார்த்தனர். விசாரணையில், அந்த மூன்று மாடி கட்டிடம் கடந்த 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முன்பு கட்டிடத்தின் நிலை குறித்து எந்த புகாரும் எழுந்ததில்லை. நேற்றும் கட்டிடத்தில் உள்ளே இருந்தவர்களுக்கு அது ஆடி அசைவது போல எந்த உணர்வும் ஏற்படவில்லை.அந்த மூன்று மாடி கட்டிடத்திற்கு பின்னால் ஆர்எஸ்புரம் கிளப் நிர்வாகிகள் தான், சம்பந்தப்பட்ட மூன்று மாடி கட்டிடம் காற்றில் அசைவது போல் உள்ளது என்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் ஆர்எஸ்புரம் காவல் நிலைய ஆய்வாளர், மாநகர காவல் இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர், மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் செய்தனர்.
உண்மையாகவே கட்டிடம் அசைகிறதா என்பதை சோதனை செய்வதற்காக அருகில் இருந்த ஒரு மரக்கிளையைத் தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். அதன் பிறகு பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்தனர். அவர்கள் கட்டிடத்தின் பேஸ்மென்ட் முதல் மொட்டை மாடி வரை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.அதில் கட்டிடத்தில் விரிசல் அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு சொல்லப்பட்டது வதந்தி என்பதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் சார்பில் கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நகைப் பட்டறையில் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய பெரிய இயந்திரங்கள் எதுவும் இல்லை.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நகைகளைப் பத்திரப்படுத்தும் பணிகளும், தொழிலாளர்கள் மீண்டும் உள்ளே செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் இந்த உறுதியான ஆய்வைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் நிம்மதியுடன் மீண்டும் கட்டடத்திற்குள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.






