நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம்.இதற்கு மிக முக்கிய காரணம், நமது நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலாக நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.
உலக அளவில் நடக்கும் பல சிக்கல்களால் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி (LPG) கேஸின் விலை எகிறிக்கொண்டே செல்கிறது. இந்த ஒரு பெரும் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புனே நகரில் உள்ள CSIR தேசிய ரசாயன ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு அட்டகாசமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். டைமிதில் ஈதர் (DME) எனப்படும் ஒரு புதிய செயற்கை எரிவாயுவை உள்நாட்டிலேயே தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த புதிய டைமிதில் ஈதர் கேஸ் ரொம்பவே சுத்தமான முறையில் எரியக்கூடிய ஒரு எரிபொருளாகும். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கேஸை விட இதில் கரும்புகை, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் போன்ற மாசுக்கள் மிக மிக குறைவாகவே வெளியேறுகின்றன.
இது நமது சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே பாதுகாப்பானது. அதே சமயம் சாதாரண எல்பிஜி சிலிண்டர் எந்த அளவுக்கு வேகமாகவும் சிறப்பாகவும் எரியுமோ, அதே அளவிலான வெப்பத்தை இதுவும் நேர்த்தியாக கொடுக்கிறது என்பதுதான் இதில் உள்ள ஒரு சுவாரஸ்யமான விஷயம். புதிதாக ஒரு கேஸ் வந்திருக்கிறது என்றால் அதற்காக நமது வீட்டில் உள்ள பழைய அடுப்பு, ரெகுலேட்டர் அல்லது டியூப்களை மாற்ற வேண்டுமா என்ற கவலை பலருக்கும் வரலாம். ஆனால் அந்த அவசியமே கிடையாது. இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி, சாதாரண எல்பிஜி கேஸுடன் சுமார் 8 சதவீதம் வரை இந்த புதிய DME கேஸை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே கலந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.20 சதவீதம் வரை கலப்பதற்கும் விதிகள் அனுமதிக்கின்றன. அதற்கும் மேலாக முழுமையாக இந்த புதிய கேஸை மட்டுமே பயன்படுத்தி சமைப்பதற்காக, ஒரு பிரத்யேகமான பர்னரையும் விஞ்ஞானிகள் இப்போது வடிமைத்து பெங்களூருவில் உள்ள மையத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளனர்.
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் சுமார் 21 மில்லியன் டன் எல்பிஜியை வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ளது. இதில் வெறும் எட்டு சதவீதம் அளவுக்கு இந்த புதிய டிஎம்இ கேஸை கலந்து பயன்படுத்தினால் கூட, நமது நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 9500 கோடி ரூபாய் பணம் மிச்சமாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பல கோடி ஏழை குடும்பங்களுக்கு தடையில்லாமல் கேஸ் வழங்க இது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமையும். சமையலுக்கு மட்டுமில்லாமல், ஓசோன் படலத்தை பாதிக்கும் கெமிக்கல்களுக்கு பதிலாக பாடி ஸ்ப்ரேக்களிலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலும் இதை சிறந்த எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். தற்போது சோதனை முறையில் நாளொன்றுக்கு 250 கிலோ அளவுக்கு இது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவை அடுத்த சில மாதங்களில் தினமும் இரண்டரை டன் அளவுக்கு உயர்த்த அவர்கள் தீவிரமாக திட்டமிட்டுள்ளனர். எரிசக்தி துறையில் இந்தியா யாரையும் நம்பியிருக்காமல் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற தற்சார்பு கனவை, விஞ்ஞானிகளின் இந்த அசத்தலான கண்டுபிடிப்பு மிக விரைவில் நனவாக்கப் போகிறது.






