விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்… ஓப்பனாக சொன்ன டிடிவி தினகரன்.!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தலை மனதில் வைத்து கூட்டணி நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகின்றன.

இதற்கிடையே தமிழ்நாடு தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு அணி போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு கவனிக்க வைப்பதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு தான் நடைபெறுகிறது. ஆனால், இப்போதே மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. ஒரு பக்கம் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.. இன்னொரு பக்கம் தேர்தலை மனதில் வைத்து கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதில் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது. இதன் காரணமாகவே தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகளையும் உள்ளே அழைத்து வரும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதேநேரம் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் முன்பு பாஜக கூட்டணியில் இருந்தனர். இப்போது அதிமுக கூட்டணி உருவாகியுள்ளதால் அவர்கள் கூட்டணியில் தொடர்வார்களா.. இல்லை தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படுமா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் சில முக்கிய பதில்களைக் கூறியிருக்கிறார்.

பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அமமுக இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு டிடிவி தினகரன், “நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று சிரித்துக் கொண்டே கேட்டு செய்தியாளர்களுக்கே அதிர்ச்சி கொடுத்தார். மேலும், இந்தக் கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், “இந்தக் கேள்வியை நீங்கள் நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும். 2024 லோக்சபா தேர்தலில் மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அதுவே நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் நல்லது என்பதை வலியுறுத்தி பாஜகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை அளித்தோம். எனவே, இன்று கூட்டணி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தால் சரியாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் 4 அணிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் ஓர் அணி.. சீமான் எப்போதும் தனித்துப் போட்டியிடுவதாகச் சொல்லி வருகிறார். அதேபோல விஜய் தலைமையிலும் ஒரு அணி உருவாகும். இப்படி நான்கு முனைப் போட்டி இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டது. சசிகலா இன்னும் மவுனமாகவே இருக்கிறார். இதனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இந்தச் சூழலில் டிடிவி தினகரன் கூறியிருக்கும் இந்தத் தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் அதற்கு என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே பலரும் கூறுகிறார்கள்.