இதெல்லாம் ஒரு தலைவன் பேசும் பேச்சா..? – விஜயை கலாய்த்த சீமான்..!!

சென்னை: புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையே பேப்பரில் எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் படித்து வருவதாக விமர்சித்துள்ள சீமான், யாரும் விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லிக் கேட்கவில்லை எனச் சாடினார். மேலும், அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள் என்றும் குறிப்பிட்டு விஜய்யை விமர்சித்தார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விஜய் மீது காட்டமான கருத்துகளைச் சீமான் தொடர்ந்து சொல்லி வருகிறார். பொதுக்கூட்டங்களில் எல்லாம் விஜய்யை நேரடியாகக் குறிப்பிட்டே சீமான் விமர்சித்து வருகிறார். அதேநேரம் சீமான் பற்றி இதுவரை விஜய் எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை.

இதற்கிடையே நேற்று கோவையில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்தார். விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லி யாருமே கூப்பிடவில்லை எனச் சொன்ன அவர், எழுதி வைத்துப் பேசுவோருக்கும் மனதில் இருப்பதைப் பேசுபவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கோவை பொதுக்கூட்டத்தில் சீமான் மேலும் பேசுகையில், “நான் எனது உச்சத்தை விட்டுவிட்டு… நான் அவ்வளவு வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என அவர் சொல்கிறார். உன்னை அரசியலுக்கு வரச் சொல்லி யார் கேட்டார்கள். உன் வீட்டு வாட்ச்மேன் கூட உன்னை அரசியலுக்கு வரச் சொல்லவில்லை. சேவை செய்ய வந்தால் அமைதியாகச் சேவை செய்ய வேண்டும்.

நீ எதற்கு அரசியலுக்கு வருகிறாய்? உன்னை அரசியலுக்கு வரச் சொன்னது யார்? அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. எம்ஜிஆரைப் போல ஆகிவிடலாம் என நினைக்க வேண்டாம். எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரம் கூட எழுதி வைப்பதைப் பார்க்காமல் பேசுவார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்கள் மொழியில் பேசுவார்.

ஸ்டாலின் கூட சின்ன சீட்டை தான் வைத்துக் கொள்வார். ஆனால், இவர் பெரிய சீட்டை வைத்து அப்படியே படிக்கிறார். சுயமாக எழுதும் மாணவர், பார்த்து எழுதும் மாணவர் இருவரில் யார் சிறந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவரால் மழை பெய்யும்போது பேச முடியாது. ஏனென்றால் பேப்பர் நனைந்து போய்விடும். பிறகு பார்த்துப் படிக்க முடியாது. அவர் பேசுவதை எல்லாம் கேளுங்கள்.. கோவையில் இந்த சாப்பாடு நல்லா இருக்கும்.. சுக்கா அருமையாக இருக்கும்.. திருச்சி என்றால் மலைக்கோட்டை சூப்பராக இருக்கும்.. இதெல்லாம் ஒரு தலைவன் பேசும் பேச்சா?

இப்போது வரலாறு, பெருமையில் இருந்து தமிழர்களை வெளியேற்றி மொத்தமாக உழைப்பில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள். எந்த வேலை செய்தாலும் அசிங்கம் என்ற மனநிலையில் கொண்டு வருகிறார்கள்.