அ.தி.மு.க-அ.ம.மு.க இணைக்க ஒ.பி.எஸ் புது பிளான்..? அவசர ஆலோசனை கூட்டம்.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைவர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் 10 மாநகராட்சிகள் இருந்தன.அப்போது நடைபெற்ற தேர்தலில் 10 மாநகராட்சியும் அதிமுக கைப்பற்றியது. அப்போது அதிமுகவின் வாக்கு சதவிகிதம் 71.34 சதவீதமாக இருந்தது.திமுக 15 சதவீத இடங்களை மட்டுமே வெற்றி பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த காட்சி தலைகீழாக மாறியுள்ளது. அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியால் தான் சட்ட மன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தோல்விக்கு என்ன காரணம் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர்.இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சியில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாகவும், தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படவுள்ளது. அப்போது பிறந்தநாள் விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் சபதம் ஏற்க்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக இருப்பதன் காரணமாக அவரை புறக்கணித்ததால் அவரது சமுதாய ஓட்டுகள் அதிமுகவிற்கு செல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பாதிப்பை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார்.எனவே அமமுகவை அதிமுகவோடு இணைப்பது குறித்து ஓபிஎஸ் தனது கருத்தை இந்த கூட்டத்தில்
தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமமுக தென் மாவட்டங்களான சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடும் படி வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி மட்டுமல்லாமல் வாக்குகளும் சிதறடிக்கவும் பட்டுள்ளது. எனவே அமமுகவை இணைப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது…