இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்… திருப்பூர் பிரசாரத்தில் தள்ளுமுள்ளு..!

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலையில் அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் பதாகைகளுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

அதிமுக முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய போர்க்கொடியைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் தமிழகமெங்கும் வலுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். தொடர்ந்து நேற்று மடத்துக்குளத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தாராபுரம் வந்தார். அங்கு மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் இரவு காங்கயம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்தார்.

இதையடுத்து பிரசாரத்தை முடித்துவிட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். இன்று காலை திருப்பூரில் தொழில் துறையினரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டார். அதைத்தொடர்ந்து, திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை காந்தி நகர் சிக்னல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு, “வேண்டும் வேண்டும் கழகம் ஒன்றிணைய வேண்டும்.. பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. அம்மா ஆட்சி வேண்டும்” என முழக்கமிட்டனர்.

மேலும், திருப்பூரில் அதிமுக கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, கழகம் ஒன்றுபட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக உண்மை தொண்டர்கள் என வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பேருந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் தொண்டர்கள் அனைவரின் விருப்பம் அதுவே என கோஷம் எழுப்பி பிரச்சாரத்துக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்களே முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.