ஏ.ஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார். அதேபோல, இந்தியா ஏ.ஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 கண்காட்சியும் இன்று தொடங்குகிறது. முந்தைய ஏ.ஐ உச்சி மாநாடுகளில் பேரழிவு தரும் அபாயங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுடன் போராடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் இந்த மாநாடு ‘மக்கள்,கிரகம் மற்றும் முன்னேற்றம்’ ஆகியவற்றை மையமாக கொண்டு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கூகுளின் சுந்தர் பிச்சை, ஓபன் ஏ.ஐ-யின் சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக்கின் டாரியோ அமோடி, மைக்ரோசாப்டின் பிராட் ஸ்மித், அடோப்பின் சாந்தனு நாராயண் மற்றும் குவால்காமின் கிறிஸ்டியானோ அமோன் போன்ற முன்னணி உலகளாவிய மற்றும் இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
இந்திய ஏ.ஐ மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறியதாவது, இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே ஏ.ஐ-யை ஜனநாயகமாக்குவது தான். அதோடு, இந்திய பொறியாளர்கள் மற்றும் உள்ளூர் திறமையாளர்கள் உருவாக்கி வரும் சுகாதாரம், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் நடைமுறை ஏ.ஐ தீர்வுகளையும் இதில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஏ.ஐ பெரும்பாலும் சில நாடுகளிலேயே உருவாக்கப்பட்டதாகும். உலகின் பெரும்பாலான மக்கள் ஏ.ஐ பயனர்களாக உள்ளனர். தரவுத்தொகுப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால், அதன் வெளியீடுகளில் பாகுபாடு இருக்கும். அதனால், கணினி, மாதிரிகள், வழிமுறைகள் மற்றும் பயன்பாடுகளின் தரவுத்தொகுப்புகளின் வடிவத்தில் ஏ.ஐ வளங்களை ஜனநாயகமயமாக்குவது இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக இருக்கும்’ என்றார்









