32 ஆண்டுகளுக்கு பிறகு. கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன்இன்று நடந்தது.

கோவை மே 10 கோவை கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இது பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக சித்திரை தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது .இந்த நிலையில் ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் இன்று காலையில் நடந்தது.. இதையொட்டி கடந்த 4-ந் தேதி இந்த கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய பிரபை,சந்திர பிரபை, யானை வாகனம் கைலாச வாகனம், முஷிக ரிஷபவெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 6 – 30 மணிக்கு ( வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ( சனிக்கிழமை) காலை 10:40 மணிக்கு நடந்தது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், மற்றும்முக்கிய பிரமுகர்களும், அறங்காவலர் குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துதொடங்கி வைத்தனர். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு பெருமாள் கோவில் ஒப்பணக்கார வீதி. மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவிலைவந்து அடைந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் 4 துணை கமிஷனர்கள், 12 உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் போலீசார் உள்ளிட்ட 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வெடிகுண்டு கண்டுபிடிப்பு உள்ளவர்கள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினார்கள்.தேருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது..நாளை (ஞாயிற்றுக்கிழமை) பரிவேட்டை ,12 – ம் தேதி மாலை 6 – 30 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 14-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு வசந்த உற்சவம் 15-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.