வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும்,கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும், முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.கோவை சிவானந்தாகாலனியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட், ஆதிஇந்திய தேசிய லீக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய செந்தில்பாலாஜி,SIR குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் தான் என்றார். IT, ED போன்றவற்றை கொண்டு வந்து அடக்கு முறையை முன்னெடுத்தார்கள் ஆனால் தோல்வியை தழுவியதால் தற்போது இந்த SIR மூலம் அடக்கு முறையை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் இதனை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார். அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க எதிர்க்கிறது என்றார். பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசு மீண்டும் வென்று விட கூடாது என நினைத்து இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்றார்.
அதிமுகவில் கண்னை மூடி கொண்டு எடப்பாடி பழனிசாமி SIR யை ஆதரிக்கிறார், அதிமுகவிற்கு இது தான் இறுதி தேர்தல் என்பதை நாம் செய்து காட்ட வேண்டும் என்றார். மேலும் தேர்தல் ஆணையத்தை பாஜக கையில் வைத்துள்ளது என்றும் கூறினார்.2026ல் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விட கூடாது என்றார். அவினாசி மேம்பாலத்தை திறந்து வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னும் பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.









