பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6மாதத்திற்கு சஸ்பெண்ட்- அண்ணாமலை அதிரடி உத்தரவு..!

சென்னை: பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன்,பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்க்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.

இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம்  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.