*கோவை உக்கடம் இருந்து நிலையம் அருகில் விபத்து : மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி ஜவுளி கடை ஊழியர் உயிரிழப்பு !!!*

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்*

கோவை, செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 40 ). இவர் கடை வீதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இன்று கிணத்துக்கடவில் பூபாலனின் உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பூபாலனும் அவரது மனைவி துர்கா தேவியும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மோட்டார் சைக்கிளை மனைவி துர்கா தேவி ஓட்டி உள்ளார். பின்னால் அவரது கணவர் பூபாலன் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் உக்கடம் பஸ் நிலையம் அருகில் பேரூர் ரோட்டில் திரும்பிய போது அந்த வழியாக வேகமாக டிப்பர் லாரி வந்தது. அங்கு உள்ள காவல் சோதனைச் சாவடி எதிரில் உள்ள திருப்பத்தில், திரும்பிய போது டிப்பர் லாரி பின்பக்க டயர் மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை குலைந்து கீழே விழுந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் பின் பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த பூபாலன் லாரியின் பின் சக்கரத்திற்குள் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பூபாலன் இறந்தார். அவரது மனைவி துர்கா தேவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இன்று காலை நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.