ரயில் நிலைய நடைமேடைகளில் ஆவின் பாலுக்கு இடமில்லை:மசாஜ் ஸ்பாவுக்கு இடம்:

கோவை ரயில் நிலையம் சந்திப்பு நடைமேடைகளில், உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவையான பால் பூத்துகள் அகற்றப்பட்டுள்ளதற்கு, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆவின் நுகர்வோர் ஆலோசனை குழு கூட்டத்தில், கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பினர், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் பொருட்கள் சரியான முறையில் கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்தனர். குறிப்பாக கோவை ரயில் நிலைய சந்திப்பில், நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு தேவையான பால், வெண்ணெய், தயிர் மற்றும் அடிப்படை மருந்துகள் கிடைக்காதது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். ஆவின் பால் பூத்துகளை அகற்றிய ரயில்வே நிர்வாகம், ஒவ்வொரு நடைமேடையிலும், ஆடம்பரமான உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்களை அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றனர்.

ஆவின் பால் ஆலோசனை கூட்டத்தில், ஆர்.எஸ் புரம் ஆவின் விற்பனை நிலையத்தில் கூட, வெண்ணெய் தொடர்ந்து கிடைக்காததும், ஆவின் ஆள் பற்றாக்குறை இதற்கு காரணம் என அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர். நெய் தாராளமாக கிடைக்கும் போது, குறைந்தபட்ச செயலாக்குமே தேவைப்படும் வெண்ணெய் கிடைக்கவில்லை என்ற விளக்கம் நம்பும்படியாக இல்லை என உறுப்பினர்கள் தெரிவித்தனர். நுகர்வோர் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, காலாவதியான நிலையில் உள்ள பாலை, புதிய பாலுடன் கலக்காமல் தடுக்கும் விதமாக, ஏழு தெளிவான வண்ண வட்ட குறியீடுகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரும்பாலான ஆவின் பூத்துகள் திறந்த நிலை சாக்கடை அல்லது கழிவுநீர் கால்வாய் களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு, சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்தபட்ச சுகாதார நெறிமுறைகளை கட்டாயமாக்க வேண்டும் என கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் வலியுறுத்தியது.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில், குறிப்பாக காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையம் போன்ற இடங்களில், ஆவின் பார்லர்களை அமைக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. ஏற்கனவே அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி, கூடுதல் ஆவின் பூத்துகள் அமைக்க தவறியுள்ளது கவலை அளிக்கிறது. எனவே உடனடியாக புதிய ஆவின் பூத்துகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் தலைவர் சி.எம் ஜெயராமன் செயலாளர் எம்.எம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.