கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணா (வயது 23) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரூபா (வயது 22 ) இவர்களுக்கு மெஹில் (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குணா தனது நண்பரான அறிவொளி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கேசவன் ( வயது 22) என்பவருடன் மது குடிக்க மேட்டுப்பாளையம் மூன்று பார் சந்து பகுதிக்கு சென்றனர். அங்கு மது குடித்தனர். பின்னர் குணாவை அங்கிருந்து காரமடைக்கு கேசவன் பஸ் ஏற்றினார். ஆனால் அதிக போதையில் இருந்த தால் டிரைவர் அறிவுரை கூறி அவரை கீழே இறக்கி விட்டு சென்றனர் . உடனே குணாவை அழைத்துக் கொண்டு கேசவன் அண்ணா ஜிராவ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அறிவொளி நகரை சேர்ந்த சரவணன் ( வயது 23) பாபு (வயது 36 )ஆகியோர் கேசவனிடம் பணம் கேட்டனர். அவர் பணமில்லை என்று கூறினார். இதனால் அவரை மிரட்டினர். உடனே கேசவன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர்கள் குணாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுக்க முயன்றனர். அவர் தடுக்க முயன்றார். இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் பாபு ஆகியோர் குணாவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த குணாவை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன்,சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய சரவணன், பாபு ஆகியோரை தேடி வருகிறார்கள்.
நடுரோட்டில் வாலிபர் அடித்து கொலை..!
