கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் – மடக்கி பிடித்த பொதுமக்கள்.!

கேரளாவில் இருந்து அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசிய படி,சாலை மார்க்கமாக கூண்டு கட்டிய வாகனத்தில் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட மீன்கழிவு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு மீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள், உணவக கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டி செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வந்தன. தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு, மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதங்கள் விதித்து வந்ததோடு, அவ்வப்போது பொதுமக்களும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வந்தனர். இதனால் படிப்படியாக கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் சம்பவங்கள் குறைந்து காணப்பட்ட நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கெட்டுப்போய் துர்நாற்றம் வீசக் கூடிய அழுகிய மீன் கழிவுகளை, கூண்டு கட்டிய வாகனத்தில் ஏற்றி, களியக்காவிளை வழியாக குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த வாகனம் கடந்து வந்த வழிகளில் எல்லாம் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்று, மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து, மார்த்தாண்டம் போலீஸாரை வரவழைத்து ஒப்படைத்தனர். அந்த வாகனத்தை திறந்து பார்த்தபோது, கொட்டுப்போன அழுகிய மீன்கள், கூடை கூடையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை ஓட்டி வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஜோபி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.