கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை தாக்கி வரும் புதிய நோயால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
இந்த நோயின் பெயர் அடினோ வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு பெயரில் மாதம் ஒரு நோய் இந்தியாவில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவுக்கு பிறகு எந்த நோய் பரவினாலும் அது ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த வகையில்தான் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை புதிய நோய் ஒன்று தாக்கி இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்கள் பரவி சில குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனை அடுத்து அவர்களின் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில் அடினோ வைரஸ் என்ற புதிய நோய் அவர்களுக்கு மத்தியில் பரவி வருவது தெரியவந்தது.
இந்த நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்கு வங்க மாநிலத்தில் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்து உள்ளன. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2 வாரங்களாக அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தை வார்டுகள் நிரம்பி வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். வெண்டிலேட்டர்கள் 100 சதவீதம் நிரம்பிவிட்டது எனவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளிலும் இதே நிலை தொடர்வதாக அவர் கூறி உள்ளார்.
குறிப்பாக 2 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு இந்த நோய் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடினோ வைரஸ் என்பது பல வைரஸ்களின் குழுவாகும். இவை நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும், பள்ளி, மருத்துவமனைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு அதிகம் சென்று வரும் குழந்தைகளிலும் அதிகம் பாதிக்கும். ஒருவரை தொடுவதன் மூலமும் இந்த அடினோ வைரஸ் பாதிக்கும். குறிப்பாக நோய் பாதித்தவரின் தும்மல், இருமல், சளி மூலமாக இந்த நோய் எளிதில் பரவும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி மருந்துகளோ, சிகிச்சை முறையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனை.
சளி, சுவாச பிரச்சனைகள், காய்ச்சல், தொண்டை வலி, நிமோனியா, காதுகளில் நோய் தொற்று, கண் சிவத்தல், வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்ஜி அல்லது சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் அது அடினோ வைரஸ் பாதிப்பாக இருக்கலாம்.
Leave a Reply