கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார்.
இந்நிலையில் தனது அறக்கட்டளைக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ. 3.17 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அதை எடுக்க ரூ. 3 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என ராமநாதனிடம் தெரிவித்து உள்ளார். பணம் ஒதுக்கப்பட்டதற்கான ஒரு கடிதத்தையும் போலியாக தயாரித்து காண்பித்து உள்ளார்.
இதை நம்பிய ராமநாதன், ரூ. 1.57 கோடி பணத்தை சுனில் தாஸ் வங்கி கணக்குக்கும், ரூ. 1.43 கோடி ரொக்கமாகவும் கொடுத்து உள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சுனில் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து உள்ளார். ராமநாதனின் அழைப்பையும் எடுக்கமால் தவிர்த்து வந்து உள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமநாதன் சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனில் தாசை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் மதுரையில் ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.