எலும்புகள் உடையும் வரை மனைவியை கணவன் அடிக்கலாம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நிபந்தனை – அந்தத் தாக்குதலில் மனைவியின் எலும்புகள் முறியவோ அல்லது ரத்தம் வரும் அளவுக்குப் பெரிய காயங்களோ ஏற்படக்கூடாது!

ஒருவேளை கணவன் மிகக் கொடூரமாகத் தாக்கி, எலும்பு முறிந்தாலோ அல்லது உடலில் தழும்புகள் ஏற்பட்டாலோ மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும். அதையும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே, கணவனுக்கு அதிகபட்சமாக வெறும் 15 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அந்தச் சட்டம் கூறுகிறது. மேலும், பெண்கள் தங்கள் கணவன் அனுமதியின்றி உறவினர் வீட்டுக்குச் சென்றால் அவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், சமூகத்தை ‘மேல் தட்டு’, ‘கீழ் தட்டு’ எனப் பிரித்துத் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பெண்களைச் சமமாக நடத்தாமல், அவர்களைத் தங்களுக்குச் சொந்தமான ‘சொத்து’ அல்லது ‘அடிமை’ போல நடத்தும் தாலிபான்களின் இந்தச் செயல், நவீன உலகில் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.