உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று (ஜனவரி 29) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சமீபத்தில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியத் தொழில் துறையினருக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று குறிப்பிட்டார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் இப்போது இந்தியத் தயாரிப்புகளுக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளன. இந்திய உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும்.” என்று அவர் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது என்றும் இந்தியாவின் இளைஞர் சக்தியின் விருப்பங்களை அந்த உரை மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கான தளம் என்று குறிப்பிட்ட பிரதமர், எதிர்க்கட்சிகள் இதில் இடையூறுகளை உருவாக்குவதை விட்டுவிட்டு, தீர்வுகளைக் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இது வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற உள்ளது. வரும் பிப்.1 ஞாயிறு அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்க செய்ய உள்ளார்.







