திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று தமிழக அரசியலின் முக்கியத் தூண்களாக விளங்கும் நான்கு தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.அரசியல் முதிர்ச்சி என்பது இதுதானா..
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொது மேடைகளில் காரசாரமாக விமர்சித்துக்கொள்ளும் இந்தத் தலைவர்கள், விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்தபோது மிகுந்த நட்புணர்வுடன் உரையாடினர். இந்தச் சந்திப்பின் நினைவாக நான்கு தலைவர்களும் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படத்தைத் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள திருமாவளவன், அதற்கு ‘முறுவலிக்கும் முரண்கள்’ என்று நயம்படத் தலைப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியாக வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்கள் காட்டிய இந்த முதிர்ச்சியான அணுகுமுறை இணையவாசிகளின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சீமானும் திருமாவளவனும் சிரித்தபடி இருக்கும் இந்தப் புகைப்படம், சமீபகாலமாக இரு கட்சித் தொண்டர்களிடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசியல் வேறு, நட்பு வேறு என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்” எனப் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த ‘நால்வர் கூட்டணி’ புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், அதே சமயம் ஒருவித நல்ல ஆரோக்கியமான நட்பையும் ஏற்படுத்தியுள்ளது…








