4 பேரை கத்தியால் குத்தி விட்டு பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை – செய்த போதை ஆசாமி வெறிச்செயல்.!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் ஜெ. ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் ,இவரது மகன் ரஞ்சித் (வயது 20) கூலி தொழிலாளி. இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் நேற்று மதியம் கஞ்சா போதையில் சொக்கம்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்தார் .அப்போது அவர் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ – மாணவிகளை வழிமறித்து தாக்க முயன்றார் .ஆனால் அவரிடமிருந்து மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர் .பின்னர் அந்த வழியாக வந்த ஒரு தெருநாயை பிடித்து தூக்கி மின்கம்பத்தில் ஒங்கி அடித்தார் . இதில் அந்த நாய் அதே இடத்தில் செத்தது .இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் சிலர் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி ரஞ்சித் திடீரென அவர்களை கத்தியால் சரமரியாக குத்த தொடங்கினார். இதில் சொக்கம்பாளையம் மாசத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேலுமணி ( வயது 44) காந்தி காலனி சேர்ந்த ( கவிதா 45) கார்த்திகா ( வயது 17 )கிறிஸ்டின் காலணியைச் சேர்ந்த சின்னசாமி (வயது 70) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .பின்னர் அவர் பாரதி நகர் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா என்ற சுந்தராம்பாள் (வயது 35) தனது வீட்டின் வாசலில் மாட்டை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த ரஞ்சித் திடீரென சகுந்தலாவை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அவர் கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்து அதே இடத்திலே உயிரிழந்தார் . இந்த கொடூர செயல் செய்த பிறகும் அவர் தன்னிலை மறந்து சுற்றித் திரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்து கை கால்களை கட்டி போட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அதியமான் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகுந்தலாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதிக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சின்னசாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை கைது செய்தனர். இதற்கு இடையே கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த கோரி பலமுறை காவல்துறையில்புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .