கோவை மே 21
மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ் காந்திபுரம் 100 ரோடு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படுத்து உறங்கும் நபருக்கும் தினேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கு கிடந்த கல்லை எடுத்து தினேஷின் தலையில் போட்டுகொலை செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனி படையினர் பல்வேறு பகுதியில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் இன்று கூறியதாவது:- தினேஷ் முன்பு பொள்ளாச்சியில் வேலை செய்துள்ளார். இதனால் அங்குள்ள ஒரு கடை மூலம் அவர் தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதை வைத்துதான் அவர் எந்த ஊர்? என்ற விவரம் தெரியவந்தது .இது தொடர்பாக 20 க்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தினேஷை கொலை செய்த நபரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவர் பொள்ளாச்சி அல்லது சேலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படையினர் பொள்ளாச்சி ,சேலம் விரைந்து உள்ளனர்.கொலையாளியை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.