காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 திரும்ப வழங்க கியூஆர் ஸ்கேன் கட்டாயம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.

மதுபாட்டில் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் முழுமையாக நிறுவப்படும் வரை, காலி பாட்டில்களை கடைகளில் ஒப்படைக்கும் நுகர்வோருக்கு ரூ.10 ரொக்கமாக திரும்ப வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்புப் பலகைகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழ், ஆங்கிலத்தில் வைக்க வேண்டும். மது விற்பனை செய்யும்போது பாட்டிலில் உள்ள கலால் துறை குறியீடு மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறுவதற்கான விரைவுத் தகவல் குறியீட்டை சரிபார்க்க வேண்டும். காலி பாட்டிலை திரும்பப் பெறும்போதும் குறியீட்டை ஸ்கேன் செய்து மத்திய தரவுத்தளத்தில் சரிபார்த்த பிறகே ரூ.10 வழங்க வேண்டும். எந்த கடையில் மதுபானம் வாங்கியிருந்தாலும், வேறு எந்த டாஸ்மாக் கடையிலும் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கலாம். வெளிநாட்டு மற்றும் பிற மாநில மதுபான பாட்டில்களில் அக்டோபர் 31ம் தேதிக்குள் திரும்பப் பெறுவதற்கான குறியீடு ஒட்டப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பாட்டில்களை எடுத்துச் செல்லும்போது கடவுச்சொல் சரிபார்ப்பு, பாட்டில்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்துதல், புகைப்படம் பதிவேற்றத்தை கைப்பேசி செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும். பழைய, புதிய விலையிலான பாட்டில்களுக்கான ரசீதுகளில் மதுபான விலை மற்றும் ரூ.10 கட்டணம் தனித்தனியாக குறிப்பிடப்படும். நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டிய தொகையை தவிர்த்து, மீதமுள்ள விற்பனைத் தொகையை அடுத்த நாள் டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும். காலி பாட்டில்களைப் பெறுதல், சரிபார்த்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.750 முதல் ரூ.2,000 வரை கையாளுதல் கட்டணம் வழங்கப்படும்.

மேலும், விற்பனை ரசீது வழங்குவதற்கும் பாட்டில்களைச் சரிபார்ப்பதற்கும் தனித்தனி கைப்பேசி சாதனங்கள் வழங்கப்படும். மதுபானக் கூடங்களிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கடைகளில் ரூ.10 நோட்டுகள், நாணயங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்யவும், காலி பாட்டில்களை விற்பனையாளர்கள் முறையாக எடுத்துச் செல்வதை மண்டல மேலாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைஅனைத்தும் நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.