மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்தம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடுகளைப் போல, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்முறையாகச் செயல் திறன் அடிப்படையிலான நெடுஞ்சாலைப் பராமரிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, நகரச் சாலைகளுக்கான குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான டெண்டர்களை நெடுஞ்சாலைத் துறை கோரியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் காலம் ஆறு மாதங்கள் ஆகும். இதில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் 24 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும், தொடர்ச்சியாகக் குளறுபடிகள் நிகழ்ந்து மூன்றாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டால் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குறுகிய கால ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நீண்ட கால பராமரிப்பு ஒப்பந்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாநில நெடுஞ்சாலைகளின் தரம் உயருவதோடு, விபத்துகளும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.