ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் ராணுவத்துக்கே உண்மையான அதிகாரம் இருப்பதாகவும், அந்நாட்டின் அரசு ராணுவத்தின் உத்தரவுகளை மீறிச் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது குழுவில் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது, ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதல் செயலர் ரகு பூரி இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் தடுமாறி வருவதாகவும், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. கைபர் பக்துன்க்வா முதல் பலுசிஸ்தான் வரை மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து சர்வதேச நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிப்பதாக ரகு பூரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் விமர்சனத்தில் பாகிஸ்தானின் தேர்தல் நடைமுறையும் இடம்பெற்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுகளைத் தொகுத்துக் காட்டும் அதிகாரப்பூர்வ ஆவணமான ‘படிவம் 47’ தொடர்பாக 2024 பொதுத்தேர்தலின்போது முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் பின்னணியில், பாகிஸ்தானின் அரசை விமர்சிப்பவர்கள் ‘படிவம் 47 அரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய இந்தியா, அந்நாட்டு அரசியல் அமைப்பில் ராணுவத்தின் செல்வாக்கு அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் சுதந்திரத்துக்குப் பிறகு சிறுபான்மையினரின் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அது காலி செய்ய வேண்டும் என்றும் ரகு பூரி தெரிவித்துள்ளார். இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்பில் உரிய ஏற்பாடுகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.






