விபத்தில் சிக்கிய ராகுல்

உத்தரப் பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பு (Convoy) திங்கள்கிழமை அன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராகுல் காந்தி எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விரைவுச்சாலையின் 91-வது கிலோமீட்டர் கல் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு அணிவகுப்பில் வந்த ஐந்து வாகனங்களும் ஒரு ஆம்புலன்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பலர் காயமடைந்தனர். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு எம்பி – எம்எல்ஏ நீதிமன்றத்தில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், அவர் அங்கு சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக, லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை காலை வந்திறங்கிய ராகுல் காந்தியை, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளூர் தலைவர்களும் உற்சாகமாக வேற்று வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் அவர் நேரடியாக சுல்தான்பூர் நோக்கிப் புறப்பட்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சுல்தான்பூரைச் சேர்ந்த பாஜக உள்ளூர் நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் 2018 ஆகஸ்ட் 4 அன்று அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். இதற்கான தீர்ப்பு முதலில் அக்டோபர் 13 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக, சுல்தான்பூர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.