அரியலூர்: விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் அரியலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணைய கூட்டத்திலிருந்து மதச்சார்பற்ற சமூக நீதியை கூட்டணியை சார்ந்த கட்சிகளும், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் வெளிநடப்பு செய்திருக்கிறது. எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு நல்ல தீர்வை சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.
எஸ்ஐஆர் மூலம் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்டத்திற்கு நகர்வது தேவையற்ற ஒன்று. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையருக்கு ஈசி சார்பில் கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. பாஜ, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களின் இந்த சதியை முறியடிக்க தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் திரள வேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி நிகழ வேண்டும் என விசிக அறைகூவல் விடுகிறது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாக தான் உள்ளது. நடிகர் தனுஷ் அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அதன் மீது கருத்து சொல்ல இப்போதைக்கு ஏதுமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல.
நடிகர் விஜய் தான் முதன் முதலில் இதை தொடங்கி வைத்தார் என சொல்ல முடியாது. திரைப்பட கலைஞர்களுக்கு அல்லது கலை உலக தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக உள்ளது. எனவே திரைத்துறையில் இருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை புதிய வரவு என பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.









