தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








