கோவையில் போதை ரகளை! பெண்களிடம் ஆபாசப் பேச்சு- வீடியோ எடுத்த நிருபரிடம் அத்துமீறல்!

மதுபோதையில் பெண்களை ஆபாசமாகத் திட்டிய ஆம்னி பேருந்து ஊழியர்” – கோவை பட்டேல் சாலையில் நிகழ்ந்த அட்ராசிட்டி: வீடியோ எடுத்த நிருபரின் செல்போன் மற்றும் வாகனம் பறிப்பு! ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்குப் பின் நடந்த கூத்து.காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை! ​

​ கோவை, வடகோவை, பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், தட்டிக் கேட்ட இளம் பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், வீடியோ எடுத்த நிருபரைத் தாக்க முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பட்டேல் சாலையில் ‘Vee Vee Bus’ என்ற தனியார் ஆம்னி பேருந்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் சார்பில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே பணியில் இருந்த சில ஊழியர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்து உள்ளனர். இந்நிலையில், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தப்படுவதற்காக வந்து உள்ளது. மிகுந்த போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் பேருந்து திரும்ப முயன்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பொழுது சாலையோரமாக இரண்டு இளம் பெண்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர். ​மதுபோதையில் இருந்த பேருந்து ஊழியர் ஒருவர், பேருந்தை பின்னோக்கி (Reverse) எடுப்பதற்கு வழிகாட்டிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து ஓரமாக நின்று கொண்டு இருந்த இளம் பெண்கள் மீதும் மோதுவது போல் வேகமாகச் சென்று உள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்கள் கூச்சலிட்டுப் பேருந்தை உடனே நிறுத்தக் கோரி உள்ளனர். இதை அடுத்து, மதுபோதையில் வந்த அந்த நிறுவன ஊழியர், தட்டிக் கேட்ட பெண்களைப் பார்த்து மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அவர்களைப் பார்த்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும், “அப்படித் தான் ஓட்டி வருவோம்; உன்னால் முடிந்ததைப் பார்” என்று கூறி அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த இளம் பெண்கள் உடனடியாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பியோடினர். இந்தச் அத்துமீறல் சம்பவத்தை அங்கு இருந்து நேரில் பார்த்த தனியார் ஊடக நிருபர் ஞானசேகரன் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். இதைக் கவனித்த மற்ற பேருந்து ஊழியர்கள், “அவன் உன்னை வீடியோ எடுக்கிறான்” என அந்த மதுபோதை ஆசாமியிடம் போட்டுக் கொடுத்து உள்ளனர். ​உடனே ஆத்திரம் அடைந்த அந்த மதுபோதை நபர், நிருபர் ஞானசேகரனை நோக்கி ஓடிவந்து அவரது செல்போன் மற்றும் வாகனத்தைப் பறித்துக் கொண்டு தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். பொதுவெளியில் நிருபர் மற்றும் பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்த அடாவடித்தனம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிருபர் ஞானசேகரன் உடனடியாகக் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்குச் சென்று, மதுபோதையில் அத்துமீறிய ஆம்னி பேருந்து ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிப் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.