சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெருமிதத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையிலும், தன் வாழ்வின் வரலாற்றுப் பக்கங்களை அவரே செதுக்கி வருகிறார். பெங்களூரில் பஸ் கண்டக்டராகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்தது வரை அவர் சந்தித்த போராட்டங்கள், சினிமா அனுபவங்கள் மற்றும் அரசியல் ரீதியான திருப்பங்கள் இதில் விரிவாக இடம்பெறவுள்ளன.
பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ நூலைப் போல வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்த நூல் உருவாகி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இதன் எழுத்துப் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஜினியின் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில் வெளியாகும் இந்தச் சுயசரிதை, வெறும் திரையுலகச் சம்பவங்களை மட்டுமே பேசாமல், ரஜினியின் ஆன்மீகப் பயணம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத பல சுவாரசியமான பக்கங்களையும் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து வெளியாகியுள்ள எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட, அதன் முதல் பிரதியை ஸ்டாலின் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் சந்தித்துக்கொள்ளும் இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களுக்கும் கூர்மையான பார்வைகளுக்கும் வழிகோலியுள்ளது. தேசிய மற்றும் மாநில அளவில் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட இரு பெரும் தலைவர்கள் ரஜினிகாந்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ஒன்றிணைவது, வெறும் புத்தக வெளியீடாக மட்டுமின்றி ஒரு முக்கியப் பண்பாட்டு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் பல ஆண்டு கால காத்திருப்பிற்கு விடை தரும் வகையில், இப்புத்தகம் விரைவில் வெளியாகிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.








