நீலகிரி, தேனியில் கனமழை அலர்ட்! 🌊 கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை!

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் பலவீனமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று  மற்றும் நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நாட்களில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15 முதல் 18 வரையிலான நாட்களில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் பதிவாகக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை, வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை பெருமளவில் மாறாமல் இயல்பு நிலையில் இருக்கும். கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வங்கக்கடலின் பல்வேறு பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 13 முதல் 16 வரை மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.