புதிய தலைமுறை பத்திரிகையாளர் கைது?

வெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களை பேரம் பேச முயன்றதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கையாளர் விஜயன் போலீஸ் விசாரணையை எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் விஜயன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று முன்தினம்  (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.

சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயனின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று  (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். தவெக எம்எல்ஏக்களுக்கு குதிரை பேரம் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக எழுந்த புகாரில் விஜய் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.