தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர் உட்பட 22 எம்.எல்.ஏ-க்களும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உட்பட 25 எம்.எல்.ஏ-க்களும் வரிசை கட்டினர். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் விஜய் தலைமையிலான த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இதனிடையே, அ.தி.மு.க கொறடாவாக தங்களை நியமிக்கக்கோரி இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். பிறகு செய்தியாளர் சந்திப்புகளில் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். இதனால் அ.தி.மு.க-வினரிடையே பெரும் குழப்பம் நீடித்தது.
இத்தகைய சூழலில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். மறுபுறம், 6 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். நிலமை மோசமாக செல்வதை உணர்ந்த இரு தரப்பினரும், ஒன்றாக செயல்பட முடிவு செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் நோக்கில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
ஆனால், சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது வரை அந்தப் பதவிகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த தகுதி நீக்க மனுக்களும் பின்னர் வாபஸ் பெறப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட பலர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருந்தனர். இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நேற்று வியாழக்கிழமை விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் கட்சிப்பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அவர் தனக்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை. அதேநேரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த எஸ்.பி.வேலுமணி, கட்சித்தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதற்கிடையே, தங்களுக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம் தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று, கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்று எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் அ.தி.மு.க-வில் மீண்டும் உள்கட்சி குழப்பம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திண்டிவனத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அ.தி.மு.க-வில் நீடிப்பதா, த.வெ.க-வில் சேர்வதா என தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. சி.வி.சண்முகம் வீட்டுக்கு த.வெ.க கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் உடனான ஆலோசனையை நிறைவு செய்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘நான் அ.தி.மு.க-வில் இருக்கிறேனா? இல்லையா என நீங்கள் கேட்க வருகிறீர்கள். நான் அ.தி.மு.க-வில் இருக்கிறேனா? இல்லையா என நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அ.தி.மு.க-வில் நான் இருக்கிறேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை; எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு சொல்லுங்கள்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.







