21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராம பகுதிக்குள் நுழைந்த அரசு பேருந்து

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், பல தசாப்தங்களாக நிலவி வந்ததாகக் கூறப்படும் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமைச் சுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வரும் ‘அண்ணா நகர்’ பகுதிக்குள், தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துப் பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் தங்கு தடையின்றி இயக்கப்பட்டுச் சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது.

கோவை காந்திபுர மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பனூர் கிராமம் வரை அரசு நகரப் பேருந்து எண் “21” இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அரசுப் பேருந்து கெம்பனூரில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் மட்டும் செல்லாமல், பல ஆண்டுகளாகத் திருப்பி விடப்பட்டு நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலை காரணமாகவே அரசுப் பேருந்து தங்களது பகுதிக்குள் வர மறுப்பதாகக் கூறி வந்தனர்.இதன் காரணமாக, அண்ணா நகரைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் சாமானிய பொதுமக்கள் எனப் பலரும் தினசரி பல கிலோ மீட்டர் தூரம் கால் கடுக்க நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வந்தது.இந்நிலையில், சமீபத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்துச் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கெம்பனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களது 21 ஆண்டு காலக் கண்ணீர் மனுவை சமர்ப்பித்தனர்.தங்கள் பகுதிக்குள் அரசுப் பேருந்து இயக்கப்படாமல் இருப்பது அப்பட்டமான சாதிய அடிப்படையிலான பாகுபாடு என்றும், இதற்கு உடனடியாக மாற்றுத் தீர்வு கண்டு பேருந்து சேவையைத் தங்களது பகுதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் உருக்கமாகக் கோரிக்கை வைத்தனர்.

மனுவை படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் வன்னியரசு, உடனடியாகக் கோவை மாவட்டப் போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.அரசின் பொதுச் சேவை என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது; உடனடியாக அண்ணா நகர் பகுதிக்குள் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கின. அதன்படி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அரசு நகரப் பேருந்து எண் 21, அனைத்து சாதியத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு, அண்ணா நகர் பட்டியலின குடியிருப்புப் பகுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

தங்களது பகுதிக்குள் அரசுப் பேருந்து முதன் முறையாக நுழைந்ததைக் கண்ட அண்ணா நகர் மக்கள், பேருந்திற்கு மலர் தூவியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் கண்ணீர் மல்கக் கொண்டாடினர். தங்களது நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு சமூக நீதி வென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.