H-1B விசா கட்டண உயர்வு ரத்து

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு வல்லுநர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.அதாவது அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசாக்களுக்கு விதித்திருந்த 1,00,000 டாலர் (சுமார் 83 லட்சம் ரூபாய்) என்ற பிரம்மாண்டமான கட்டண உயர்வை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், ஐடி ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்தாண்டு அதிபர் பதவிக்கு வந்தவுடன் குடியேற்றத்தைத் தடுக்கப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அப்படித் தான் கடந்தாண்டு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார். ஒரு லட்சம் டாலர், அதாவது சுமார் 83 லட்சம் ரூபாய் கட்டினால் தான் விசா என உத்தரவிட்டார்.இதனால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களால் திறமையான ஊழியர்களை அழைத்து வர முடியாமல் போனது. பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியர்களே இந்த H-1B விசா மூலம் பயன் பெறும் சூழலில், இதனால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தான் H-1B விசா கட்டணத்தை டிரம்ப் உயர்த்தியது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் நேற்று திங்கள்கிழமை இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.அவர் தனது தீர்ப்பில், “அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, இவ்வளவு பெரிய தொகையை விசா கட்டணமாக விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை” என்றார். இந்த நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்த நீதிபதி, உடனடியாக அதை ரத்து செய்தார்.கடந்த செப்டம்பர் மாதம், குடியேற்றக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக டிரம்ப் இந்த அதிரடி கட்டண உயர்வை அறிவித்தார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் மற்றும் அதிகக் கட்டணம் வசூலிப்பதன் மூலம், நிறுவனங்கள் வெளிநாட்டினருக்குப் பதில் அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்த முன்வரும் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு, ஒரு H-1B விசாவுக்கு நிறுவனங்கள் சராசரியாக 2,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வந்தன. அதை ஒரேயடியாக 1,00,000 டாலராக உயர்த்தியது நிறுவனங்களுக்குப் பெரும் சுமையாக அமைந்தது.

கலிபோர்னியா உட்பட ஜனநாயகக் கட்சி ஆளும் 19 மாநிலங்கள் இந்த விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அதிபர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதே அவர்களின் முக்கிய வாதமாக இருந்தது. இது தவிர, அமெரிக்க வர்த்தகச் சபை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கும் பல முன்னணி நிறுவனங்களும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தன. அதில் தான் டிரம்ப்பிற்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது.

H-1B விசா திட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியர்களே அதன் மிகப் பெரிய பயனாளிகள். இதனால் நீதிமன்ற உத்தரவால் இந்தியர்களே அதிகம் பயன் பெறப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் H-1B விசாக்களில் பெரும்பகுதியை இந்தியர்களே பெறுகின்றனர். தொழில்நுட்பம் (IT), பொறியியல், சுகாதாரம் மற்றும் நிதித் துறைகளில் பணிபுரியும் இந்திய வல்லுநர்களுக்கு இந்த விசா ஒரு வரப்பிரசாதம். ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் தடையாக இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டதால், இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன.