அதிமுகவிலிருந்து செம்மலை திடீர் விலகல்

திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளருக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கட்சியின் தற்போதைய நிலைகுறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கிவிட்டது. இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை; மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானது ஆகும். உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.புரட்சித்தலைவர் அவர்களும், புரட்சித்தலைவி அவர்களும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு, அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமைமிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு எனக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன; தடுக்கப்பட்டன. அதைப்பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தலைமைக்குக் கட்டுப்பட்டுத் தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.மறைந்த ஆளுமைமிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை; மனம் வேதனைப்படுகிறது.
எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு, அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்பைக் கோரி, கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதைத் தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என அக்கடிதத்தில் எஸ்.செம்மலை குறிப்பிட்டுள்ளார்.