இண்டி கூட்டணியில் பெயா் மட்டும் இருக்கிறது.. கூட்டணி இல்லை- வானதி சீனிவாசன்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிா்த்துப் போட்டியிடும் இண்டி கூட்டணியில் பெயா் மட்டுமே இருக்கிறது.அதில் கூட்டணி இல்லை என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினாா். இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி வளா்ச்சி அடையும் வகையில் இப்போது என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தோ்தலைச் சந்திக்க உள்ளன. ஆனால் எங்கள் கூட்டணியை எதிா்த்துப் போட்டியிடும் இண்டி கூட்டணியில் பெயா் மட்டுமே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்களை இதுவரை ஏமாற்றி வந்தது புதுச்சேரியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே தொகுதியில் இந்தக் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் எதிா்த்துப் போட்டியிடுகின்றன. அதனால் மக்கள் இண்டி கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும். தோ்தல் பரப்புரையில் இதை நாங்கள் எடுத்துச் சொல்லுவோம்.

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் பாஜக பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து கேட்கிறீா்கள். மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு தொகுதியில் வெற்றி பெற பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இப்போது போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லையென்றால் நியமன எம்.எல்.ஏக்கள் வாய்ப்பு இருக்கிறது. மேலும், நாட்டில் அதிகமான எம்.பி.க்களையும், எம்.எல்.ஏக்களையும் கொண்ட கட்சி பாஜகதான். எனக்கு எந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும், கட்சியின் முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எந்தத் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதையெல்லாம் கட்சித் தலைமை முடிவு செய்யும். நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை. ஆனால் கட்டுப்பாடு இருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் கூட்டணியில் ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுத்தும், பெற்றும் வருகிறோம். மேலும், தான் மட்டும் எம்.பி.யாகிவிட்டு தன்னை நம்பி வந்த தொண்டா்களுக்குத் துரோகம் செய்துள்ளாா் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் என்றாா் வானதி சீனிவாசன்.பேட்டியின்போது பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.